பொள்ளாச்சி ஆனைமலையில் மாநில அளவிலான கபடிப்போட்டி - 70 அணிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, மாநில அளவிலான கபடிப் போட்டி நடத்தப்பட்டது. இறுதிப்போட்டியில், மீனாட்சி மங்களம் அணியும் தமிழன் தளவாய் பட்டினம் அணியும் மோதின. இதில், மீனாட்சி மங்களம் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.



கோவை: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை, திமுகவினர் கொண்டாடிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கபடி விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கு பெறும் கபடி போட்டி நடைபெற்றது.



நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை, திண்டுக்கல் சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 70 அணிகள் பங்கேற்றன.



நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான காலுறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிப் போட்டிகள் நேற்றிரவு நடைபெற்றது.

இறுதிப்போட்டியில், மீனாட்சி மங்களம் அணியும் தமிழன் தளவாய் பட்டினம் அணியும் மோதின. இதில், மீனாட்சி மங்களம் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.



வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் ரூபாயை திமுக பொதுக்குழு உறுப்பினர் ARV சாந்தலிங்கம், ஆனைமலை பேருராட்சி தலைவர் கலைச்செல்வி ஆகியோர் வழங்கினர்.



இரண்டாம் பரிசு ரூ 30 ஆயிரம் பணம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி துணை தலைவர் ஜாபர் அலி முகமது உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter