கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி - தமிழக, கேரள அணிகள் அசத்தல்!

கோவையில் நடந்த மாற்றுத்திறளாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதிபோட்டியில் தமிழகம், கேரள அணிகள் மோதின. இதில் வென்ற கேரள அணிக்கு ரூ.25 ஆயிரம், சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டன. இரண்டாம் பிடித்த தமிழக அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.



கோவை: கடந்த ஐந்து வருடங்களாக கோவையை சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான டி10 பி.பி.சி.சி.எல். (P.B.C.C.L)கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியினருக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்று வரும் இந்த போட்டியின், இறுதியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்த காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.



இதில் முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 12 ஓவர்களில் 115 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய கேரள அணியினர் 11 ஓவர் மூன்று பந்துகளில் 3விக்கெட்டுகளை மட்டும் இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.



வெற்றிபெற்ற கேரள அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு 15 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காது மற்றும் வாய் பேச இயலாதோர் மைதானத்தில் விளையாடியகிரிக்கெட் போட்டியை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

Newsletter