சர்வதேச கபடி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற கோவை மாணவருக்கு உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச கபடி போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற கோவை மாணவர் ரியாஸ்கான், பல்வேறு இடங்களில் கபடி மைதானங்கள் அமைத்து கபடி விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


கோவை: சர்வதேச கபடி போட்டியில் பங்கேற்று ஆட்டநாயகன் விருது பெற்ற கோவை மாணவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாளத்தில் கடந்த 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை சர்வதேச கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. கோவை கே.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் கோவையை சேர்ந்த ரியாஸ்கான் என்ற மாணவர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.



இந்த சர்வதேச கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், ரியாஸ்கான் ஆட்டநாயகன் பட்டத்தை வென்றார். பின்னர், கோவை திரும்பிய ரியாஸ்கானுக்கு கோவை ரயில் நிலையத்தில் குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகிகள், நண்பர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



பின்னர், மாணவர் ரியாஸ்கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், தமிழக முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோரைச் சந்திக்க விரும்புகிறேன்.

என்னை ஊக்குவித்த YSP (இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு) சங்கத்திற்கு நன்றி. தமிழகத்தில் பல்வேறு கபடி வீரர்கள் உள்ளனர். கபடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கபடி மைதானங்கள் கட்டப்பட வேண்டும். கபடி வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளித்து அவர்களின் சாதனைகளுக்கு உறுதுணையாக உதவ அரசு முன்வர வேண்டும், என்றார்.

Newsletter