தேசிய அளவிலான தடகள போட்டி - திருப்பூர் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சாதனை!

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காது கேளாதோருக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய திருப்பூர் முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



திருப்பூர்: மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டியில் திருப்பூரை சேர்ந்த மாணவ - மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தேசிய அளவிலான காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகள் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் லோகநாதன், குருபரன், தர்சனா, ஜீவா ஆகிய 3 பேர் பங்கேற்றனர்.



இதில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குருபரன் 2-வது பரிசையும், 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பெண்கள் பிரிவில் தர்சனா 3-வது பரிசையும், 600 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் ஜீவா 3-வது பரிசையும் வென்று சாதனை படைத்தனர்.



தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று திருப்பூருக்கு திரும்பிய வீரர்களுக்கு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.



தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் குருபரன், தர்சனா, ஜீவா ஆகிய 3 பேரும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர். இந்த போட்டி நடைபெறும் இடம், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter