கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க கிரிக்கெட் போட்டி : ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்

கோவையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்ற நிலையில் வெற்றி பெற்ற அணிகள் ரொக்கப் பரிசுகளை தட்டிச்சென்றன.


கோவை: கோவை கரும்புகடை சேரன் நகர் பகுதியில் எஸ்.எஸ்.எஸ் ஸ்போர்ட்ஸ் என்ற தனியார் அகாடமி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி, 10வது ஆண்டாக இந்தாண்டும் மதநல்லிணக்க கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு வழங்கும் விழா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது, மாணவர்கள் இளைஞர்களிடையே நல்ல பண்புகள் வளர விளையாட்டில் ஆர்வம் கொள்ள வேண்டும். விளையாட்டு திறன்களை மாணவர் மற்றும் இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் விதமாகவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரான உதயநிதியை விளையாட்டு துறை அமைச்சராக நியமித்து உள்ளார். இளைஞர்கள் நல்வழியில் பயணித்து அனைவரும் மத நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



இதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற கவுரவ அழைப்பாளர்கள் சிறந்த வீரர்கள் மற்றும் அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

கோவையில் சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்க மத நல்லிணக்கத்தை சார்ந்த இதுபோன்ற முன்னெடுப்புகள் பலராலும் பாராட்டப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter