திருப்பூர் தாராபுரத்தில் நடைபெற்ற மினி மாரத்தான்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு

தாராபுரம் பகுதியில் விழுதுகள் மற்றும் கிராம விழிப்புணர்வு சமூக அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விழுதுகள் மற்றும் கிராம விழிப்புணர்வு சமூக அறக்கட்டளை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் வழங்கிட வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.



தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் முன்பு தொடங்கிய இந்த மினி மராத்தான் போட்டியை காவல் ஆய்வாளர் மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



பந்தய இலக்கான 9 கிலோமீட்டர் தொலைவை, ஆற்று பாலம், கொழிஞ்சி வாடி, உப்புத்துறை பாளையம் வழியாக தாலுகா அலுவலக சாலை, புதிய காவல் நிலைய வீதி, பெரிய கடை வீதி வழியாக சென்ற மாணவ-மாணவியர் மீண்டும் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர்.



இந்த மினி மாரத்தான் போட்டியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த நபருக்கு ரூ.5000 ரொக்க பணம், சான்றிதழ் மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் 2ஆம் இடத்தைப் பிடித்தவருக்கு ரூ.3000 பணம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 3ஆம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.2,000 ரொக்கப் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.



Newsletter