மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழகம்

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் உள்ளிட்ட 3 விதமான சாம்பியன் பட்டங்களை கோவை வேளாண் பல்கலைக்கழகம் கைப்பற்றியது.


கோவை: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை வேளாண் பல்கலைக்கழகம் கைப்பற்றி உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ ஆண்டுதோறும்‌ கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப்‌ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் மாணவ மாணவியர்‌ மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டிற்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த டிசம்பர் 11ஆம் துவங்கியது. நான்கு மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டிகளில் 42 கல்லூரிகளிலிருந்து சுமார்‌ 1,300 மாணவ மாணவியர்கள்‌ பங்கேற்றனர்.

இந்த போட்டியின் நிறைவு விழா கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவிற்கு பல்கலைக்‌ கழக துணைவேந்தர்‌ முனைவர்‌.வெ.கீதாலட்சுமி தலைமை தாங்கினார்‌. மாணவர் நலமைய முதன்மையர்‌ முனைவர்‌. நா.மரகதம்‌ வரவேற்பு உரையாற்றினார்‌.

இந்த விழாவில் தாம்பரம் காவல் ஆணையர், முன்னாள் காவல்துறை டி.ஜி.பி.யுமான முனைவர்.மு.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில்‌ வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டியும்‌, பரிசுகள்‌ வழங்கியும் கௌரவித்தார்.

இந்நிலையில் நிறைவு விழாவினை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும்‌ உடற்கல்வி உதவி இயக்குனர்‌ முனைவர்‌. ஜே.பி.தேசிக ஸ்ரீநிவாசன்‌, நன்றியுரை ஆற்றினார்‌.



விளையாட்டுப்‌ போட்டி 2022-23யின் முடிவுகள்‌ பின்வருமாறு:

ஆண்களுக்கான தனிப்பட்ட நபர் பிரிவில் தடகள சாம்பியன் பட்டத்தை திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவர் முகமது அனாஸ் கைப்பற்றினார். மேலும், பெண்களுக்கான தனிப்பட்ட நபர் பிரிவில் தடகள சாம்பியன் பட்டத்தை வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி மாணவி V.R.சுவாதி கைப்பற்றினார்.

இதேபோல், ஆண்களுக்கான ஒட்டு மொத்த பிரிவில்‌ விளையாட்டு சாம்பியன் பட்டத்தை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தட்டிச் சென்றது. மற்றும் பெண்களுக்கான ஒட்டு மொத்த பிரிவில்‌ விளையாட்டு சாம்பியன் பட்டத்தையும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கைப்பற்றியது.

ஆண்களுக்கான ஒட்டு மொத்த பிரிவில்‌ தடகள சாம்பியன் பட்டத்தை மதுரை வேளாண் கல்லூரி தட்டிச்சென்றது. மேலும், பெண்களுக்கான ஒட்டு மொத்த பிரிவில்‌ தடகள சாம்பியன் பட்டத்தை திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் தோட்டக்கலை கல்லூரி கைப்பற்றியது.

இதேபோல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரிவில் விளையாட்டு மற்றும் தடகள சாம்பியன் பட்டத்தையும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கைப்பற்றியது.

Newsletter