மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி: வெற்றி பெற்ற கோவை நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!

கோவை நேரு ரைபிள் கிளப்பை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கப்பதக்கம், 5 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.


கோவை: மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற கோவை நேரு ரைபிள் கிளப் மாணவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கோவை நேரு ரைபிள் கிளப் தலைவர் டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் மற்றும் செயலாளர் எஸ்.அஜய் ஆகியோர் கூறியதாவது:-

கடந்த 2016 ஆண்டு நேரு ரைபிள் அகாடமி துவக்கப்பட்டது. இதில் இதுவரை சுமார் 230 மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றுள்ளனர்.

இங்கு பயிற்சிக்கு வரும் மாணவ மாணவியர்கள் தங்களது திறமைகளை வெளிக் கொண்டுவர பல்வேறு சிறப்பு பயிற்சிகள், தனித்துவமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இம்மாணவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயார் செய்து வருகின்றோம். அவர்களுக்கு தேவையான வசதிகளையும், கல்வி சார்ந்த உதவிகளையும் செய்து வருகின்றோம்.

தற்போது கடந்த மாதம் 24 – 31 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் எங்களது நேரு ரைபிள் கிளப் மாணவர்கள் மாணவி டுவிங்கிள் யாதவ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவி பிரீத்தி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மாஸ்டர் உமன் பிரிவில் தங்கப்பதக்கமும் மற்றும் 50 மீட்டர் ஓப்பன் சைட் ரைபிள் பிரிவில் மாணவன் ஜெய் கிஷோர் தங்கப்பதக்கமும், கார்த்திக் தனபால் வெண்கல பதக்கமும் வென்றனர். 10 மீட்டர் ஓப்பன் சைட் ஏர் ரைபிள் பிரிவில் மாணவன் சஜய் ஆண்கள் சப் யூத் மற்றும் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் சில்வர் மற்றும் வெண்கல பதக்கம் வென்றார். மாணவி ஸ்வர்னலதா மாஸ்டர் உமன் பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவ் வெள்ளி பதக்கத்தையும் மாணவி பிரியதர்ஷினி சப் யூத் உமன் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.

இவர்களை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி. எஸ். சமீரன் (08.08.2022) பாராட்டி கௌரவப்படுத்தினார். அவர் மாணர்களிடம் இது போல அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வாங்க வேண்டும். அதே போல படிப்பிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண் வாங்கி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். தற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதிக அளவில் பதக்கம் வென்று வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதே போல் நீங்களும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பாராட்டு நிகழ்ச்சியின் போது நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் நேரு ரைபிள் கிளப் தலைவர் டாக்டர். பி. கிருஷ்ணகுமார் மற்றும் செயலளார் எஸ். அஜய் மற்றும் நேரு கல்வி குழுமங்களின் மக்கள் தொடர்பு இயக்குனர் முனைவர் அ. முரளிதரன் உட்பட மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

Newsletter