கோவையில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான டிரான்ஸ் மாரத்தான் போட்டி

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற திருநங்கைகளுக்கான, 'டிரான்ஸ்' மாரத்தான் போட்டியில், 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் கலந்து கொண்டனர்.



கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாரத்தான் போட்டி நடைபெறுவது வழக்கம். அதில், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், வயதானோர், இவ்வளவு ஏன் ஊனமுற்றோர் கலந்து கொண்டு நாம் பார்த்திருப்போம்.



ஆனால், இன்று கோவையில் முதன் முறையாக திருநங்கைகளுக்கான "டிரான்ஸ்" மாரத்தான் என்ற போட்டி நடைபெற்றது.



இந்தப் போட்டியில் 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்றனர்.



"மங்கையவனன்" பவுண்டேசன், சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாரத்தான் போட்டியை, கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் மற்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



கோவை நேரு விளையாட்டு மைதானம் முன்பு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று முடிவடைந்தது.



போட்டியில், சில திருநங்கைகள் சிலம்பம் சுற்றி கலை மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்தினர்.



இறுதியாக, போட்டியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter