கோவை பொள்ளாச்சியில் தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள்..!

தேசிய அளவிலான 18-வயதுக்குட்பட்டோருக்கான 31-வது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை பொள்ளாச்சியில் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏப்ரல் 18-முதல் 23-வரை நடைபெறுகிறது.



கோவை: கோவை பொள்ளாச்சியில் தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 18-முதல் 23-வரை நடைபெறுகிறது.

சக்தி குழும நிறுவனங்களின் நிறுவன தலைவர் அமரர் அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் ஐயா அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும், இந்தியாவில் உள்ள சதுரங்க சங்கங்களில் 80 வருடப் பழமையான கோவை மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து தேசிய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான (பொது மற்றும் மகளிர் பிரிவு) எம்.பி.எல் - 31-வது சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளை வருகின்ற 18.04.2022 முதல் 23.04.2022 வரை எம் சி இ டி கல்லூரி வளாகத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் 237 பேர் பங்கேற்க உள்ளனர். 22 மாநிலங்களிலிருந்து பொதுப் பிரிவில் 142 பேரும், மகளிர் பிரிவில் 95 பேரும் கலந்து கொள்ள உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது மிக்க சர்வதேச மாஸ்டர் ஹெச்.பரத் சுப்ரமணியம் இந்தப் போட்டியின் முன்னணி வீரராகத் திகழ்ந்து வருகிறார்.

மொத்தம் 2503 புள்ளி மதிப்பீட்டைக் கொண்ட முதல் நிலை வீரராக உள்ள இவருக்கு இம்மாத இறுதியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப் பட உள்ளது. மேலும் மற்ற முன்னணி வீரர்களான தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது மிக்க சர்வதேச மாஸ்டர் எல் ஆர் ஸ்ரீஹரி (2398), 18 வயது மிக்க சர்வதேச மாஸ்டர் அவினாஷ் ரமேஷ் TN (2369), 17 வயது மிக்க மனிஷ் அன்டோ கிறிஸ்டினோ TN (2129) மஹாராஷ்ட்ராவைச் சார்ந்த ஆயுஷ் சர்மா (2311), கோவையைச் சார்ந்த ஹர்ஷத் (2272), 9 வயதுக்குட்பட்ட தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் முன்னாள் வெற்றியாளர் தமிழகத்தைச் சேர்ந்த ஏ ஆர் இளம்பரிதி, மகளிர் பிரிவில் நெய்வேலியைச் சார்ந்த ஜோத்சனா (2017), மஹாராஷ்டிராவைச் சார்ந்த பாக்கியஸ்ரீ பாட்டில் (1931), 15 வயதுக்குட்பட்ட பிரிவில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தி காந்தா (1909) போன்ற முன்னணி போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இளைஞர்களுக்கான சர்வதேச சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதிகளாகப் பங்கேற்க உள்ளனர்.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ 9 லட்சத்தில் மூன்றில் ஒரு பங்கு தொகை எம் பி எல் (MPL) மூலமாகவும், மீதி தொகையை எம் சி இ டி கல்லூரியும் வழங்கியுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் எம் சி இ டி கல்லூரி வளாகத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. எம் சி இ டி கல்லூரியும் கோவை மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், போட்டியாளர்கள் தங்குவதற்கும், உணவு ஏற்பாடுகளையும் சிறந்த முறையில் செய்துள்ளன.

போட்டிகள் அனைத்தும் சுவிஸ் முறையின் கீழ் விளையாடப்படும். ஒவ்வொன்றும் பதினொரு சுற்றுகளைக் கொண்டிருக்கும். ஒரு நகர்வுக்கு 30 வினாடிகள் அதிகரிப்புடன் ஒவ்வொரு வீரருக்கும் 90 நிமிட நேரக் கட்டுப்பாடு வழங்கப்படும். இறுதி நாள் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் ஒரு நாளைக்கு இரண்டு சுற்றுகள் இருக்கும். போட்டிகள் காலை 09.30 மணிக்கும் & பிற்பகல் 03.30 மணிக்கும் தொடங்கும். சாம்பியன்ஷிப்பின் முதல் இருபது போட்டிகள், பிரபலமான இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இதன் மூலம் லட்சக் கணக்கான பார்வையாளர்கள் போட்டிகளை ஆன்லைனில் கண்டுகளிக்க முடியும்.

எம் சி இ டி கல்லூரி, பங்கேற்பாளர்களின் வருகை விவரங்களை முன்னரே பெற்று கோவை விமான நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் பொள்ளாச்சிக்கு போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

துவக்க விழா:

சமீபத்தில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த ஆர்.பிரக்ஞானதா உட்பட பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கிய இந்தியாவின் புகழ்பெற்ற பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் 18.04.2022 அன்று சாம்பியன்ஷிப்பைத் தொடங்கி வைக்கிறார். மேலும் தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் பொது செயலாளர் திரு பி ஸ்டிபன் பாலசாமி, கல்லூரி செயலர் டாக்டர் சி இராமசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் ஆ ரத்தினவேலு தமிழக அணியின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் எம். ஷியாம் சுந்தர் ஆகிய முக்கியப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். இறுதி நாள் விழாவில், TNSCA இன் தலைவரும், சக்தி குழுமத்தின் தலைவருமான டாக்டர். எம். மாணிக்கம் அவர்கள் தலைமை வகிக்க, அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் கெளரவ செயலாளர் பரத் சிங் சவுகான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.

எம்.சி.இ.டி, என் பி டி கல்லூரி, சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடர்பு:

எம் சி இ டி மற்றும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து இது போன்று பல்வேறு தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளை கல்லூரி வளாகத்தில் நடத்தியுள்ளது. முன்னாள் ஆசிய மகளிர் சாம்பியன் எஸ்.விஜயலட்சுமி, 18-வயதுக்குட்பட்ட பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் ஆர்த்தி ராமசாமி ஆகியோர் இங்கு தேசிய பட்டங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சதுரங்கப் போட்டிக்கு டாக்டர் மகாலிங்கம் ஐயாவின் பங்களிப்பு மகத்தானது. அகில இந்திய சதுரங்கக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவர் என்ற முறையில், சதுரங்கத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பாடுபட்டார்.

அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் ஐயா அவர்கள் சதுரங்க உலகில் யாருடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத திறமை கொண்டவர். சதுரங்கத்தின் மீது அவருக்கு இருந்த தீராத பற்றால் துயரத்தில் இருந்த சதுரங்கப் போட்டியாளர்களுக்கு பல்வேறு உதவிபுரிந்துள்ளார். சர்வதேச மற்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டங்களைப் பெற்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகைகளை நிறுவ வழிவகுத்தார். இது சதுரங்க வீரர்களை அதிகமாக ஊக்குவித்தது. சதுரங்க விளையாட்டை மத்திய அரசு மானியம் பெற தகுதியான முக்கிய விளையாட்டாக அங்கீகரிப்பதில் முக்கிய பங்காற்றினார்.

இந்த சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளை வெற்றிகரமாக ஒழுங்கமைப்பதில் கோவை மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவர் ஸ்ரீ. என். ஜெயபால் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார். மேலும் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற திரு விஸ்வநாதன் ஆனந்த், முதன் முதலில் 1987-ல் டாக்டர் என்.மகாலிங்கம் அவர்களால் கோயம்புத்தூரில் நடத்தப்பட்ட சக்தி சுகர்ஸ் சர்வதேசப் போட்டியில் இருந்துதான் கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காமன்வெல்த் சாம்பியன் பி.மித்ரகாந்த், வி.சரவணன் மற்றும் வி.எஸ்.ரத்தினவேல் மற்றும் தேசிய அளவிலான 9 வயதுக்குட்பட்ட பிரிவின் தற்போதைய சாம்பியனான ஜி.ஆகாஷ் போன்ற பல்வேறு செஸ் மாஸ்டர்களை உருவாக்கிய பெருமை கோவை மாவட்டத்திற்கு உண்டு.

கடந்த முறை இந்த சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் 2019 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெற்றது, இதில் 89 ஆண்கள் மற்றும் 55 பெண்கள் பங்கேற்று விளையாடினர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை.

இந்தப் போட்டியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐ.எம்.நீலாஷ் சாஹா, ஐ.எம். ஆரோன்யக் கோஷ் மற்றும் உத்சாப் சட்டர்ஜி ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். தமிழ்நாட்டின் சிறந்த வீரராக நவின் ஜேஜே தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்தாவது இடத்தைப்பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டனர்.

மகளிர் பிரிவில் சம்ரித்தா கோஷ் (WB), சாய்னா சலோனிகா (ORI) மற்றும் கல்யாணி B (AP) முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த எல் ஜோத்சனா நான்காவது இடத்தைப் பிடித்தார். தமிழ்நாட்டிலிருந்து 14 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.

மேற்படி தகவல்களை TNSCA இன் தலைவரும் எம் சி இ டி கல்லூரி தலைவருமான டாக்டர் எம் மாணிக்கம் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார். சர்வதேச நடுவர் திரு அனந்தராம், எம் சி இ டி கல்லூரி தாளாளர், திரு. எம். ஹரி ஹர சுதன், எம் சி இ டி கல்லூரி முதல்வர், முனைவர் ஆ.இரத்தினவேலு, CDCA வின் செயலர், திரு தனசேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்கு:

டாக்டர்.எஸ்.ஐயப்பன் - +91 94880 51370

எஸ் நாகராஜன் – 9865907649

கே. தனசேகர் FI, அமைப்புச் செயலாளர் மற்றும் செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட சதுரங்க சங்கம் - +91 99448 98753

மின்னஞ்சல்: [email protected]

இணையதளம்:www.mcet.in

Newsletter