சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் இனி நேரு விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொள்ளலாம் – கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல்!

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள் மட்டும் நேரு விளையாட்டு மைதானத்தைப் பயிற்சிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, அன்றாட வாழ்க்கை முறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது.

குறிப்பாக வழிபாட்டுதலங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை அனைத்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் நேரு விளையாட்டு மைதானத்தை பயிற்சிக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக எந்தவித பயிற்சிக்கும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது கடந்த ஒரு மாத காலமாக விளையாட்டு மைதானங்களில் பயிற்சிப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் நேரு விளையாட்டு மைதானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த விளையாட்டு மைதானத்தின் அருகில் உள்ள கோவை மாநகராட்சி மைதானத்தில் கடந்த சில மாதங்களாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்றுவந்தனர்.

கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையிலும், பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் மீண்டும் வழக்கம் போல நேரு விளையாட்டு அரங்கத்தை தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் தடகள மேற்கொள்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்து கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், நேரு விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இங்கு பயிற்சி பெற விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும் தற்போது தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் தடகள போட்டிகளுக்கு பயிற்சி பெறும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter