கோவையில் மாநில பாரா ஒலிம்பிக் போட்டி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்!

கோவை: கோவையில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் மற்றும் ஆலயம் டிரஸ்ட் சார்பில் கோவை நேரு ஸ்டேடியத்தில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது சீனியர் தடகளப் போட்டி மற்றும் 6-வது ஜூனியர்,சீனியர் நீச்சல் போட்டி தொடங்கப்பட்டது.‌ இதில் சுமார் 1200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நேரு ஸ்டேடியத்தில் இருந்து நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரி வரை நடத்தப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் பேரணியை தொடங்கி வைத்தார்.

வரும் 16-ம் தேதி வரை தொடர்ந்து போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு வாங்கியிருந்தாலும் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் தேசிய அளவிலான தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும். தேசிய போட்டிகளில் தகுதி பெறுபவர்கள் வரும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க முடியும்.

கோவையில் நடக்க உள்ள தடகளம் மற்றும் நீச்சல் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் என்ஜினீயர் சந்திரசேகர் செய்து வருகிறார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு கோவையில் தங்குவதற்கான வசதி செய்து தரப்பட்டுள்ளது. உணவு மற்றும் கோவையில் உள்ள பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்திலிருந்து போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று வருவதற்கான வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்க உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter