முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கோவை தங்கங்கள்

கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான தேக்வான்டா போட்டியில் 3 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.



முதலமைச்சர் கோப்பைக்கான தேக்வான்டா போட்டி தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்றது. இதில், 21 வயதுக்குட்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விளையாட்டு ஆணையத்தின் கோவை பிரிவின் சார்பில் 16 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் பெண் விளையாட்டு வீரர்கள் 43, 46, 49, 53, 57, 62, 67, 67 உள்ளிட்ட எடை பிரிவிலும், ஆண்கள் 50, 54, 58, 63, 58, 73, 77 மற்றும் 77 உள்ளிட்ட எடை பிரிவிலும் போட்டியிட்டனர்.

இப்போட்டியில் கோவை அணி 3 தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றது. சபர்பன் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா, கோவை சி.ஐ.டி கல்லூரியில் பயிலும் பிரியங்கா, பாரதி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் சங்கமித்ரா ஆகியோர் தங்கப் பதக்கம் மற்றும் பரிசுத் தொகையாக தலா 1 லட்சம் ரூபாய் வென்றனர்.

கோவை சவுடேஷ்வரி வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் அவந்திகா வெள்ளிப் பதக்கமும், பரிசுத் தொகை 75 ஆயிரம் ரூபாயினையும் வென்றார். 

மேலும், இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த ரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்இ இரண்டாம் ஆண்டு பயிலும் விஷ்வேந்திரன், வி.எல்.பி கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு பயிலும் மதன்குமார், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி முதலாம் ஆண்டு பயிலும் மதுமிதா ஆகியோர் வெங்கலப் பதக்கமும், பரிசுத் தொகை ரூ.50 ஆயிரமும் வென்றனர்.

இதைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றிபெற்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் இன்று கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். அப்போது ஆட்சியர் ஹரிஹரன் அனைவரையும் பாராட்டி கௌரவித்தார்.

Newsletter