மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்றது திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அணி!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

பெண்களை கபடி போட்டியில் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பொள்ளாச்சி சாம்ராட் கபடி குழு சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 25ம் ஆண்டு பெண்களுக்கான கபடி போட்டி பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், சென்னை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 22 பெண்கள் அணி பங்கேற்று விளையாடியது.

நாக்-அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில், இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் SMVKC அணியும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாம்ராட் கபடி குழு அணியும் தகுதி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் பொள்ளாச்சி சாம்ராட் கபடிக்குழு 21 புள்ளிகளும், ஒட்டன்சத்திரம் SMVKC அணி 25 புள்ளிகள் பெற்றது. பொள்ளாச்சி சாம்ராட் அணியை விட 4 புள்ளிகள் அதிகம் பெற்று ஒட்டன்சத்திரம் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. முதல் பரிசு பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் கோப்பைகளும், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு பதினைந்தாயிரம் ரூபாய் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

Newsletter