அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டி: போலீஸ் அணி கோப்பையை வென்றது

கோவை: கோவை கேரளா கிளப்பில் நடைபெற்ற அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டியில் போலீஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.

கோவை: கோவை கேரளா கிளப்பில் நடைபெற்ற அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டியில் போலீஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.

அல்ட்ரா கோப்பை 2020 இறகு பந்து போட்டிகள் கோவை கேரளா கிளப்பில் கடந்த 7ம் தேதி துவங்கியது. கேரளா கிளப் அணி, ஊடகங்களில் பணியாற்றுவோர் மற்றும் காவல்துறையை சேர்ந்த 30 அணிகள் பங்கேற்றது. இதில் அரையிறுதி போட்டியில் கேரள கிளப் அணி வீரர்கள் தங்கவேல், சரவணன் அதே அணியை சேர்ந்த ஜூட் வசந்த், பாலாஜி எதிர்த்து விளையாடி தோல்வி அடைந்தனர்.

மற்றொரு பிரிவில் போலீஸ் அணி வீரர்கள் சந்தோஷ்குமார், முபாரக் அலியை எதிர்த்து சங்கீத், கார்த்திக் விளையாடினர். இதில் போலீஸ் அணி வீரர்கள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர். இறுதிப் போட்டியில் கேரள கிளப் அணி மற்றும் போலீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் போலீஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

முன்னதாக இறுதி போட்டியை கேரள கிளப்பின் தலைவர் ஸ்ரீ குமரன் போட்டியை துவக்கி வைத்தார். போலீஸ் அணி சார்பில் சந்தோஷ்குமாரும் முபாரக் அலியும் கேரள கிளப் அணிக்காக ஜூட் வசந்த் மற்றும் பாலாஜி ஆகியோர் விளையாடினர். முதல் செட்டை கேரள கிளப் அணி வீரர்கள் 21-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர். சுதாரித்து ஆடிய போலீஸ் அணி வீரர்கள் இரண்டாவது செட்டில் 21-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது செட்டில் அனல் பறந்த ஆட்டத்தில் இரண்டு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றதால் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல போவது யார் என்ற பரபரப்பு தொற்றி கொண்டது. இறுதியில் 23-21 என்ற புள்ளி கணக்கில் போலீஸ் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, வெற்றி தோல்வி அடைந்த வீரர்களுக்கு டி.ஐ.ஜி கார்த்திகேயன் கோப்பைகளை வழங்கினார். வளர்ந்து வரும் வீரர், அரையிறுதியில் தோல்வி அடைந்த அணியினருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்றவர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழாவில் கேரள கிளப் செயலாளர் சசிதரன், பொருளாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்கிரீட் சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter