கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டியில் கேரள அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தமிழக அணி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது

கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 5 நாட்களாக தேசிய அளவிலான இளையோருக்கானதடகளப் போட்டிகள் நடைபெற்றன. 103 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டிகளில் 429 புள்ளிகள் பெற்ற கேரள மாநில அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. புள்ளி பட்டியலில் 413 புள்ளிகள் பெற்ற தமிழக அணி இரண்டாம் இடம் பிடித்து அசத்தியது. புள்ளி பட்டியலில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹரியானா மாநில அணி, கேரளம் மற்றும் தமிழக வீரர்களின் அசத்தலினால் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

தமிழக அணி தொடர் ஒட்டம், 200 மீட்டர் ஒட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 24 தங்கப்பதக்கங்களை வென்றனர். அதேசமயம் 18 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்ற கேரள அணி புள்ளிகள் அடிப்படையில் சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற கேரளம் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்த தமிழக அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. தமிழகம் சார்பில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்ற வீராங்கனை 3 தங்கப்பதக்கங்களை கைப்பற்றினார்.



இந்த போட்டிகளில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த லோகநாயகி என்ற மாணவி, சிறந்த தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அணி சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்த முறை நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்வதுடன், ஒலிம்பிக் போட்டிகளிலும் தமிழக வீரர்கள் தங்கம் வெல்வார்கள் என தமிழக வீரர்கள் தெரிவித்தனர். தேசிய தடகள போட்டிகளில் கேரள மாநில அணி 22 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter