தமிழ்நாடு தடகள அமைப்பின் சார்பில் 32வது தேசிய தடகள போட்டி கோவையில் துவக்கம்

தமிழ்நாடு தடகள அமைப்பின் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா 32வது தேசிய இளைஞர் தடகள போட்டி கோவை நேரு விளையாட்டரங்கில் துவங்கியது. வியாழனன்று (இன்று) துவங்கிய இப்போட்டிகள் தொடர்ந்து வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதுமிருந்து சுமார் 2600 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதில், 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 16, 18, 20 என வயதின் அடிப்படையில் வீரர்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக போட்டிகள் நடைபெறும். இப்போட்டிகளில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக முகமது நிசாமுதீன் என்பவர் செயல்பட உள்ளார்.

இதுகுறித்து முகமது நிசாமுதீன், நமது நிருபரிடம் கூறியதாவது:-

''தமிழ்நாடு சார்பாக பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் மற்ற அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள். இதில், சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்தியாவின் சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். பிஎஸ்ஜி, கிருஷ்ணா, என்ஜிபி, பிஎஸ்ஜிஆர் மற்றும் சிஎம்எஸ் பள்ளி, சர்வோஜன பள்ளி உள்ளிட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி விளையாட்டு வீரர்கள் தமிழக அணியின் சார்பில் இடம்பெற்றுள்ளனர்'' என்றார்.

Newsletter