பெண்கள் ஹாக்கி: இந்தியா 'ஆசிய சாம்பியன்'

சிங்கப்பூர்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் அசத்திய இந்திய பெண்கள் அணி, முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது. பைனலில் 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது.

சிங்கப்பூரில், பெண்களுக்கான 4வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் இந்தியா, சீனா அணிகள் மோதின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்தியாவின் தீப் எக்கா முதல் கோல் அடித்தார். இதற்கு சீன வீராங்கனைகளால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சீன அணிக்கு 44வது நிமிடத்தில் மெங்லிங் ஜோங் ஒரு 'பீல்டு' கோல் அடித்து கைகொடுத்தார்.

இதனால் போட்டி 1-1 என சமநிலை அடைந்து விறுவிறுப்பானது. தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 60வது நிமிடத்தில் மீண்டும் 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தீபிகா ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி முதன்முறையாக கோப்பை வென்றது. கடந்த 2013ல் (இடம்: ஜப்பான்) பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி, ஜப்பான் அணியிடம் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

சரியான பதிலடி

இம்முறை லீக் போட்டியில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது. இதற்கு, நேற்றைய பைனலில் பதிலடி தந்த இந்தியா, கோப்பை வென்று சாதித்தது.

ஜப்பானுக்கு வெண்கலம்

நேற்று நடந்த 3-4வது இடத்துக்கான போட்டியில் ஜப்பான், தென் கொரியா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, 3வது இடத்துக்கான வெண்கலம் பெற்றது.

Newsletter