கூடைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற கோவை மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாவட்ட கூடைப்பந்துகழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மினி ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற கோவை அணி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோயம்புத்தூர், அக்டோபர் 17, 2016 நேற்று, மதுரையில் 13 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த பெண்கள் அணி 1- வது இடமும், ஆண்கள் அணி 3 -வது இடமும் பெற்றது. 



இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


ஆண்கள் மாநில அணிக்கு:- 

1.ஆர்.பிரியதர்ஷன் (பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி), 2 எஸ்.அருள் கானிசாய்ராம் (ஆர்.கே.எஸ். பள்ளி).


பெண்கள் மாநில அணிக்கு:-

1.கே.சத்யா, 2.எ.நிகிதா, 3.ஹரித்ரா, 4.டி.பூஷனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மினி ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய கோவை அணி மாணவர்களுக்கு கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவில் மாணவியர்கள் பிரிவில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2,000 ரொக்கப்பரிசும், மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 

விழாவிற்கு, வருகை புரிந்தவர்களை கோவை மாவட்ட கூடைப்பந்து கழக இணைச் செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆனந்த் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் செல்வராஜ் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

அப்போது அவர் கூறியதாவது :-கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள மாணவ மாணவியர்களை ஊக்குவித்து வருகின்றது. அவர்களுக்கு வேண்டிய உபகரணங்களை வழங்கி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தேவையான ஆலோசனைகளை வழங்க சிறந்த பயிற்சியாளர்களும் உள்ளனர். 

தற்போது தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியர் சிறந்த முறையில் விளையாடி தேசிய அணிக்கு தகுதிபெற தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், மாவட்ட அணியில் விளையாடி வரும் வீரர்கள் மாநில அணிக்கு தகுதிபெற முயற்சிக்க வேண்டும். அதற்கு கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் என்று உறுதியளிக்கின்றோம். ஏற்கனவே இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்டுத்த ஆண்டு தோறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கோவையில் நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் பயிற்சியாளரான உமனன் அவர்கள் தற்போது 13 வயதிற்குட்பட்ட தமிழ்நாடு ஆண்கள் அணியின் பயிற்சியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

விழா முடிவில் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் சிரில் இருதயராஜ் அவர்கள் நன்றி கூறினார்.

Newsletter