கோவை கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நினைவானது ; சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் திறப்பு


கோவை : à®•ோவையில் முதல் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முன்னாள் ஐ.சி.சி தலைவர் என்.சீனிவாசன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறந்து வைத்தார். இதன் மூலம் கோவை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களின் நீண்டகால கனவு நிறைவேறியுள்ளது.



73 மீட்டர் நீள எல்லை பவுண்டரிகள் கொண்ட இந்த மைதானத்தில் அணிகளுக்கு தனித்தனி பெவிலியன், நடுவர்கள், மூன்றாம் நடுவர்கள், போட்டி நடுவர்கள், ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் என அனைவருக்கும் அறைகள் உள்ளன. இதில், அமைக்கப்பட்டுள்ள பெவிலியன், சர்வதேச தரத்திற்கு இணையாக கட்டப்பட்டுள்ளது.



திறப்பு விழாவில் பேசிய என்.சீனிவாசன், இதுபோன்ற உயர்தர கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான இடத்தை வழங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி அறக்கட்டளை மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (சி.டி.சி.ஏ) அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

"சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமான கோவை மாவட்டம், தமிழ்நாட்டிற்கு தரமான வீரர்களை உருவாக்கி வருகிறது". மேலும், பல இளம் கிரிக்கெட் வீரர்களை கண்டுகொள்ள இந்த கிரிக்கெட் மைதானம் அடித்தளமாக இருக்கும் என்றார்.



தமிழ்நாடு மற்றும் மாவட்ட கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு இந்த மைதானம் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று கூறிய அவர், டி.என்.சி.ஏ போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்படும் எனவும் விளக்குகள் பொருத்தப்பட்டால் பகலிரவு போட்டிகள் நடத்த உதவிகரமாக இருக்கும் என்றார்.

டி.என்.பி.எல் குறித்து கருத்து தெரிவித்த என்.சீனிவாசன், மாவட்டங்களில் இருந்து பல திறமைகளைக் கண்டறிய டி.என்.பி.எல் அவர்களுக்கு உதவியதாக என்றார். மேலும், வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொள்ள மைதானத்தில், 6 விக்கெட் களம்(பிட்ச்) உள்ளதால் டி.என்.பி.எல் போட்டிகள் நடத்தப்படும் போது வீரர்கள் பயிற்சி பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார். வீரர்கள் விளையாட்டில் அதிக உயரத்தை அடைவதற்கு டி.என்.பி.எல் சிறந்த அடித்தளமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு தமிழக வீரர்களை அடையாளம் காண டி.என்.பி.எல் உதவிகரமாக இருப்பதாகவும், இது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் மிகப்பெரிய வெற்றியாகும் என்று கூறினார். .



இந்த விழாவில், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.லட்சுமிநாராயசாமி, செயலாளர் கௌதமன், இணை செயலாளர்கள் சுரேஷ்குமார், மகாலிங்கம் மற்றும் தமிழக மாநில மூத்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter