உலக கோப்பை கபடி: இந்தியா சாதனை வெற்றி

அகமதாபாத்: உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நடந்த லீக் போட்டியில், இந்தியா-அர்ஜென்டினா அணிகள் மோதின. இதில், 74-20 என்ற புள்ளி கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும் உலக கோப்பை தொடர்களில், அதிக புள்ளிகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற அணி (54 புள்ளிகள்) என்ற புதிய சாதனையையும் இந்தியா படைத்தது. இந்தியாவின் ராகுல் சவுத்ரி, அஜய் தாகூர் ஆகியோர் கூட்டாக 25 ரெய்டு புள்ளிகளை பெற்று, வெற்றிக்கு பெரிதும் உதவினர். ஆனால் வலுவான இந்தியாவுக்கு எதிராக புள்ளிகளை பெறவே அர்ஜென்டினா போராடியது.

அனைத்து துறைகளிலும் இந்தியாவை சமாளிக்க முடியாமல் அர்ஜென்டினா திணறியது. 

முதல் ஆட்டத்தில் கொரியாவுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தாலும், அதன்பின் சுதாரித்து விளையாடி ஆஸ்திரேலியா, வங்கதேசம், அர்ஜென்டினா அணிகளுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் இந்தியா 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை நாளை மறு நாள் (18ம் தேதி) எதிர்கொள்கிறது. அதே சமயம் அர்ஜென்டினா அணி, இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஒரு புள்ளி கூட பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

Newsletter