வீராங்கனை ஷரபோவாவின் தண்டனைக்கா‌லம் குறைப்பு

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவின் தண்டனைக்கா‌லத்தை 15 மாதங்களாக குறைத்து சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தடைசெய்யப்பட்ட மெல்டோனியம் என்னும் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் ஷரபோவாவிற்கு கடந்த ஜூன் மாதத்தில் 2 ஆண்டுகள் தடைவிதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் ஷரபோவா முறையீடு செய்தார். உடல் உபாதைகளுக்கான பயன்படுத்திய மருந்தில் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள் கலந்திருந்தது தமக்கு தெரியாது என ஷரபோவா வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து இரண்டாண்டுகள் விதிக்கப்பட்டிருந்த தடையை 15 ‌மாதங்களாக குறைத்து விளையாட்டு போட்டிகளுக்கான சர்வதேச தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனை குறைக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 25ம் தேதிக்கு பின் நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா மீண்டும் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter