ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை-கொல்கத்தா ஆட்டம் டிரா

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோதிய சென்னை-கொல்கத்தா அணிகள்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 59-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது கொல்கத்தா. இந்த கோலை ஹெல்டர் போஸ்டிகா கொடுத்த கிராஸில் சமீக் டூட்டி அடித்தார்.

இதையடுத்து அபாரமாக ஆடிய சென்னை அணி அடுத்த 7-ஆவது நிமிடத்தில் (66-ஆவது நிமிடம்) கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுத்தது.

ஜேஜே கொடுத்த கிராஸில் ஜெயேஷ் ரானே கோலடித்தார். 

இதனால் உத்வேகம் பெற்ற சென்னை அணி 70-ஆவது நிமிடத்தில் ஹன்ஸ் முல்டர் அடித்த கோலால் 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து ஸ்கோரை சமன் செய்யப் போராடிய கொல்கத்தா அணிக்கு 86-ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்க, அதில் இயான் ஹியூம் கோலடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசிக் கட்டத்தில் லால்ரின்ஸýலா செய்த தவறால் பெனால்டியை வாங்கி வெற்றியைக் கோட்டைவிட்டது.

புணே-மும்பை இன்று மோதல்

புணேவில் திங்கள்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் புணே சிட்டி அணியும், மும்பை அணியும் மோதுகின்றன.

புதிய கோல் கீப்பரான எடெல் பீட் வருகையால் புதிய உத்வேகம் பெற்றுள்ள புணே அணி, தலைமைப் பயிற்சியாளர் ஹபாஸ் இன்றி களமிறங்குவது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த ஹபாஸ் விதிமுறையை மீறியதற்காக இந்த சீசனில் 4 ஆட்டங்களில் மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் புணே 2 வெற்றிகளையும், மும்பை ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன. ஓர் ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

Newsletter