உலகக்கோப்பை கிரிக்கெட் : அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இதில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கீட்டதால், போட்டி ரிசர்வ் டே-ஆன இன்று நடத்தப்பட்டது. எஞ்சிய ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெய்லர் 74 ரன்களும், வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர்.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணிக்கு, முன்னணி வீரர்கள் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர். ரோகித் சர்மா, கேப்டன் கோலி, கே.எல். ராகுல் ஆகியோர் தலா ஒரு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 25 பந்துகளுக்கு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும், பண்ட், ஹர்திக் பாண்டியா தலா 32 ரன்கள் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், ஜடேஜா, தோனி இருவரும் வெற்றிக்காக போராடினர். ஜடேஜா தேவைப்படும் போது, சிக்சர்களை அடித்து ரன்ரேட்டை சீராக கொண்டு வந்தார். இந்த நிலையில், 77 ரன்கள் எடுத்த ஜடேஜா போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து, தோனி 50 ரன்னில் ரன் அவுட் ஆனார். இதோடு, இந்திய அணியின் வெற்றி நியூசிலாந்து பக்கம் திரும்பியது. இறுதியில், இந்திய அணி 49.3 இவர்களுக்கு 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Newsletter