ஆசிய அளவிலான கராத்தே போட்டியில் இந்தியாவிற்குப் பெருமை சேர்ந்த மேட்டுப்பாளையம் மாணவர்கள்

கோவை : ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

கோவை : ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மட்சுசீமா என்ற அமைப்பின் சார்பில் ஆசிய அளவிலான கராத்தே போட்டிகள் கடந்த 23-ம் தேதி மியான்மர் நாட்டில் நடைபெற்றது. இதில், 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் இருந்து நான்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியாளர் அருள்மொழி தலைமையில் மியான்மர் சென்றனர். இதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பூந்தழிர் என்ற மாணவியும், தருண் என்ற மாணவரும் கலந்து கொண்டனர். இவர்கள் 12 வயது முதல் 14 வயதுடைய பிரிவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளதுடன், இந்தியா சார்பில் முதல் முறையாக கராத்தே போட்டியில் முதல் பரிசினை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 



பெண்கள் பிரிவில் 40 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற பூந்தழிர், நான்கு சுற்றுகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் சீனா வீராங்கனையை தோற்கடித்து முதல் பரிசினை தட்டி சென்றார். இதேபோல், 12 வயது முதல் 14 வயது ஆடவர் பிரிவில் கலந்துகொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணவர் சஞ்சய் முதல் இடத்தையும், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாணவன் தருண் மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இவர்கள் இறுதி போட்டியில் மியான்மர் மற்றும் இந்தோனேசியா நாடுகளின் வீரர்களை எதிர்த்து கடுமையாகப் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளனர். 

ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் இந்தியா முதல் பரிசினை பெறுவது இதுவே முதல் முறையாகும். போட்டியில் வெற்றி பெற்று ஊர் திரும்பிய வீரர்களுக்கு அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் உற்சாக வரவேற்பு அளித்துப் பாராட்டினர். மேலும், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் எதிர்வரும் 2022-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் இவர்கள் மூவரும் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter