தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகா ஒட்டுமொத்த சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் கர்நாடகா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோவை : கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் கர்நாடகா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் சார்பில் 16 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய அளவிலான தரவரிசைப் போட்டி நடைபெற்றது. 



இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியானது, ஜுனியர் வீரர்கள், வீராங்கனைகள் என ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடத்தப்பட்டது. காளப்பட்டியில் உள்ள லீவோ ஸ்போர்ட்ஸ் டென்னிஸ் அரங்கில் இன்று நடந்த இறுதி போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் நிதிலன் எரிக் 6-1, 6-0 என்ற கணக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சாஹேப் சோதியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இரட்டையர் பிரிவில் நிதிலன் எரிக் சக மாநில வீரர் அர்ஜுன் பிரேம்குமாருடன் இணைந்து சக மாநில வீரர்களான மோனில் லோட்லிகர் மற்றும் ரோகின் லோட்லிகர் இணையைத் தோற்கடித்து மகுடத்தை சூடியது. 



இதேபோல, பெண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் சுஹிதா மரூரி, தமிழகத்தின் குந்தன ஸ்ரீ பன்டாருவை 6-7, 6-3 மற்றும் 10-7 என தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் சுஹிதா மரூரி மற்றும் அவரது சகோதரி ரேஷ்மா மரூரி (கர்நாடகா) இணை, குஜராத்தின் திவ்யா பரத்வாஜ் மற்றும் தெலுங்கானாவின் ஆர்னி எல்லு ரெட்டி இணையை 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பயிற்சியாளர் ஸ்ரீஹரி பரிசுகளை வழங்கினார்.

Newsletter