டெக்வெண்டோ போட்டியில் ஒருதலைபட்சம் : மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்ட தங்கமகன்

கோவை : தகுதிச் சுற்றுப் போட்டியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் ஒருதலைபட்ச நடவடிக்கையால், தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர் மாநில அளவிலான டெக்வெண்டா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.


கோவை : தகுதிச் சுற்றுப் போட்டியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் ஒருதலைபட்ச நடவடிக்கையால், தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர் மாநில அளவிலான டெக்வெண்டா போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். 

மாநில அளவிலான டெக்வெண்டா போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மாவட்ட முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தெற்காசிய போட்டியில் தங்கம் வென்றவரான பிளஸ்2 மாணவன் ஸ்ரீ ஹரிஹரனும் பங்கேற்றார். இதில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் ஒருதலைபட்ச நடவடிக்கையால், சிறப்பாக செயல்பட்ட போதும் ஸ்ரீ ஹரன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போகிவிட்டதாக பாதிக்கப்பட்டவரும், அவரது பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த விளையாட்டுத் துறைக்கான ஒதுக்கீடு மூலம் மேற்கல்வியைத் தொடர இருந்த அந்த மாணவனின் கனவும் பாழாகிவிட்டதாக வேதனை கூறுகின்றனர்.



மாநில அளவிலான போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரின் கண்காணிப்பில் கோவை மாவட்டத்தில் உள்ள உடற்கல்வி இயக்குநர்களை நடுவர்களாகக் கொண்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்தப் போட்டிகள் கொடிஸ்டா என்ற தனியார் கிளப் மூலம் இந்த முறை நடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நடுவர்கள் குறிப்பிட்ட கிளப்பைச் சேர்ந்த வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மீண்டும் இந்தப் போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் ஸ்ரீ ஹரன் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக, ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலாய பள்ளியின் டெக்வெண்டோ பயிற்சியாளர் டி. மனோஜ் சிம்ப்ளிசிட்டியிடம் கூறியதாவது :- மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்த லட்சுமியின் கண்காணிப்பில் உடற்கல்வித் துறையின் கீழ் இந்தப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், தற்போது நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகள் கொடிஸ்டா (CODISTA) என்ற தனியார் கிளப் மூலம் நடத்தப்பட்டது. மேலும், டெக்வெண்டோ புதிய விளையாட்டு என்பதால், போட்டி தொடர்பான விதிமுறைகள் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தெரிவதில்லை. ஆகவே, இந்தப் போட்டிகள் அமச்சூர் டெக்வெண்டோ கூட்டமைப்பின் மூலம் நடத்தப்பட வேண்டும்.

இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரிடம் உரிய புகார் அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து, போட்டியை திரும்ப நடத்த பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது, என்றார்.

"போட்டிகள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றியே நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய இந்தப் புகார் குறித்து உடற்கல்வி ஆசிரியர்களே பதிலளிக்க வேண்டும். குறிப்பிட்ட வீரரின் பெற்றோர்கள் அளித்துள்ள இந்தக் கடிதத்தில் எந்த பலனும் இல்லை," என மாணவனின் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அனந்த லட்சுமி.

மாணவனின் உயர்கல்விக் கனவை பாழாக்கும் விதமான இதுபோன்ற சம்பவங்ளை, இனி வரும் காலங்களில் தவிர்க்க அரசும், மாவட்ட டெக்வெண்டோ கூட்டமைப்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter