கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பொள்ளாச்சியில் ஆகஸ்ட் 16, 18-ல் கல்வி கடன் வழங்கும் முகாம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கு வரும் 16,18 ஆகிய தேதிகளில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில், மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

அதன்படி, உடுமலை, மடத்துக்குளம். பொள்ளாச்சி வால்பாறை, ஆனைமலை ஆகிய வட்டத்திற்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 16.08.2023 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5 மணிவரை பொள்ளாச்சி, உடுமலை சாலையில் உள்ள டாக்டர் மாகலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதேபோல், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், சூலூர் வட்டத்திற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 18.08.2023 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5 மணிவரை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்திலும் மாபெரும் கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது.

வித்யாலட்சுமி "இணையதளம்” தகுதியான ஒரு மாணவன், மேற்படிப்பு படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது, என்கின்ற காரணத்தால் வித்யாலட்சுமி என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு, கல்விகடன் வழங்கப்பட்டு வருகிறது.

10வது மற்றும் 12வது படிப்பை முடித்த பின் படிக்கக் கூடிய சான்றிதழ் படிப்பு (ஐடிஐ) பட்டயப்படிப்பு (டிப்ளோமா), பட்டப்படிப்புகள், கலை அறிவியல் படிப்புகள் மற்றும் தொழிற்கல்விகள் ஆகிய அனைத்து படிப்புகளுமே கல்விகடன் வழங்கப்படுகிறது.

நிர்வாக ஒதுக்கீடு மற்றும் கலந்தாய்வில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள் அனைவரும் கல்விக் கடன் பெற தகுதியுடையவர்கள். நிர்வாக ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பொதுப்பிரிவு மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண்களும், SC/ST மற்றும் பெண்கள் 50 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் வரம்புகள் இல்லை,

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் ஆதார்கார்டு, பேன் கார்டு. 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு எண் (joint account), கல்லூரி சேர்க்கை ஆணை, கல்லூரி Bonofide மாணவர் என்கிற சான்று, கல்லூரி செலவினங்களுக்கான சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகிய ஆவணங்களுடன் "வித்யாலட்சுமி” என்ற இணையத்தில் பதிவிட வேண்டும்.

கல்விக்கடன் பெற ரூ.4 லட்சம் வரை எந்தவித பிணையமும் கொடுக்க வேண்டியது இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை மூன்றாம் நபர் உத்திரவாத கையெழுத்து மட்டும் போதுமானது. ரூ.7.50 லட்சத்திற்கு மேல் கடன்தொகைக்கு இணையான சொத்து பிணையம் கொடுக்க வேண்டும்.

கல்விக் கடனை படிப்பு முடிந்து ஒரு ஆண்டிற்கு பிறகு 120 மாத தவணைகளில் கட்டலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கியை அணுகி ஆலோசனை பெறலாம்.

எனவே, உயர்கல்வி பயில்வதற்கு மாணவ மாணவியர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, "வித்யாலட்சுமி" என்ற இணையதளத்தில் உரிய சான்றுதழ்களுடன் விண்ணப்பித்து கல்வி கடன் பெறலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...