"வறட்சியை சமாளிக்க நுண்ணீர்ப் பாசனத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்'

"வறட்சியை சமாளிக்க நுண்ணீர்ப் பாசனத்துக்கு விவசாயிகள் மாற வேண்டும்'

வறட்சியை சமாளிக்க நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

மழையின்றியும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும் உள்ள தற்போதைய சூழலில், விவசாயிகள் பாசனத்துக்கு தங்களிடமுள்ள சிறிதளவு நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். இந்த வறட்சியான தருணத்தில் விவசாயிகளின் பயிர் சாகுபடி, உணவு தானியப் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், நீர் மேலாண்மைக்காக அரசு பல திட்டங்களை மானிய விலையில் செயல்படுத்தி வருகிறது.

அவற்றில் மிக முக்கியமானது நுண்ணீர்ப் பாசனத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக தோட்டக்கலைப் பயிர்களுக்கு மட்டுமின்றி அகன்ற இடைவெளிப் பயிர்களான தென்னை, எண்ணெய் பனை மற்றும் குறுகிய இடைவெளிப் பயிர்களான  நிலக்கடலை, மக்காச்சோளம், கரும்பு மற்றும் பயறு வகைப் பயிர்களுக்கும் அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்ப் பாசனம் அமைக்கலாம்.

எனவே, விவசாயிகள் தங்களுடைய பயிர்களுக்கு நுண்ணீர்ப் பாசன முறையில் அரசு மானியத்தில் பாசன வசதி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி அரசு தரும் மானியங்களை பெற்று நீர்ப்பாசனம் செய்து கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது விவசாயத்துக்கான பாசன நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகளைப் பயன்படுத்தி சிக்கனமாக, அரிதாகக் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டும்.

அதற்காக மத்திய, மாநில அரசுகள் மானியங்களை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியான விவசாயிகள் பங்கேற்றிட தங்கள் வட்டார வேளாண் துறை அலுவலர்களை நாடி தங்கள் விருப்பப்படி அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலமாக நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்துக் கொள்ளலாம்.
தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகள், இடம் மாற்றும் தெளிப்புநீர்ப் பாசனக் கருவிகள் மற்றும் ரெயின்கன் போன்ற உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. உடனுக்குடன் எவ்விதத் தடையுமின்றி விவசாயிகளுக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter