குமரி மாவட்டத்தில் கிராம்பு அமோக விளைச்சல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

குமரி மாவட்டத்தில் கிராம்பு அமோக விளைச்சலைக் கண்டுள்ள நிலையில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நறுமணப் பயிர்கள் விளையும் மாவட்டமாகும். இங்குள்ள மலைப் பகுதிகளான பாலமோர், மாறாமலை, முக்கடல், கரும்பாறை, ஆறுகாணி, மோதிரமலை உள்ளிட்ட இடங்களில் கிராம்பு, மிளகு, வனிலா, ஜாதிக்காய், கோகோ உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதில் கிராம்பு அதிக விலை மதிப்பு கொண்ட பயிராகும். கிராம்பு மரத்தின் பூ மொட்டுகள், தண்டு, இலை இவை அனைத்தும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டவையாகும். இவை கிராம்புப் பூக்கள், கிராம்பு அல்லது இலவங்கம் என்ற பெயரில் வகைப்படுத்தப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் நிகழாண்டு கிராம்பு அமோக விளைச்சலைக் கண்டுள்ளதையடுத்து, அதன் அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ளன. பொதுவாக மலைப் பகுதி கிராம்புத் தோட்டங்களில் மரங்களில் ஏறி கிராம்புப் பூக்களைப் பறிப்பது கடும் சிரமம்.

தற்போது கிராம்புப் பூ பறிப்பதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

விலை வீழ்ச்சி:   நிகழாண்டில் கிராம்பின் விளைச்சல் அதிகமான காரணத்தாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளின் தொடர் பாதிப்புகளாலும் கிராம்பின் விலை கடந்த ஆண்டை விட வீழ்ச்சி கண்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், கடந்த ஆண்டு ஒரு கிலோ உலர்ந்த கிராம்பு ரூ. 900 வரை விற்ற நிலையில், தற்போது கிலோ ரூ. 740-க்கு விற்பனையாகிறது என்கின்றனர் அவர்கள்.

இதுகுறித்து மாறாமலைப் பகுதி கிராம்பு விவசாயி கூறியதாவது: கிராம்பு மரங்களை பராமரிப்பது மற்றும் அவற்றிலிருந்து பூ பறிப்பது போன்றவை அதிகச் செலவை ஏற்படுத்துவதாகும்.

தற்போது உள்ளூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், வடமாநிலத் தொழிலாளர்களை பணிக்கு ஈடுபடுத்துகிறோம். இம்மாவட்ட கிராம்புக்கு சர்வதேச சந்தையில் நல்ல மதிப்புள்ளது. எனினும் கடந்த ஆண்டை விட தற்போது விலை குறைந்துள்ளது கவலையளிக்கிறது என்றார்.

Newsletter