பயறு வகைகளை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயறு வகைகளை சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் என்.அரிவாசகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆண்டு தோறும் சராசரியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 827 மி.மீ. மழையும்,வடகிழக்குப் பருவமழையாக 501 மி.மீ. மழையும் பொழிகிறது. ஆனால், நடப்பாண்டில் 348.6 மீ.மீ.மழையும், வடகிழக்குப் பருவமழை மூலம் குறைந்த அளவு மழையாக 173.8 மி.மீ.மழையும் பெய்துள்ளது. சம்பா பருவத்தில் இதுவரை நெல் 1.21 லட்சம் ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 5,587 ஹெக்டேரிலும்,பயறு வகைகள் 4,121 ஹெக்டேரிலும்,எண்ணெய் வித்துக்கள் 4,207 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  போதிய மழை இல்லாததாலும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததாலும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பாசன வசதி உள்ள இடங்களில் குறைந்த நீரை பயன்படுத்தி குறுகிய காலத்தில் அறுவடை செய்து மகசூல் பெறும் வகையில் பயறு வகைகளை சாகுபடி செய்து அனைத்து வட்டார விவசாயிகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பயறு வகைப் பயிர்களில் உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். 60 முதல் 65 நாள்களில் மகசூல் தரக்கூடிய ரகங்கள் ஆன உளுந்து வம்பன்-5 அல்லது வம்பன்-6, பாசிப்பயறு-கோ-7 அல்லது கோ-8 ஆகிய ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்து பயன் பெறலாம்.

வறட்சி மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளரும் பொருட்டு விதை நேர்த்தி செய்து சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். ரசாயன மருந்துகள் அல்லது உயிர் காரணிகள் மற்றும் பூஞ்சாண மருந்துகளை கொண்டும் விதைகளை நேர்த்தி செய்யலாம்.சம்பா பருவத்தில் பயறு விதைகள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு நீர்ப்பாசன் வசதி உள்ள இடங்களில் விதை உற்பத்தி செய்ய விதைப்பண்ணை அமைக்குமாறும் அனைத்து விதை உற்பத்தியாளர்களையும் கேட்டுக் கொள்வதாகவும் இணை இயக்குநர் என்.அரிவாசன் தெரிவித்துள்ளார்.

Newsletter