குறைந்த தண்ணீரிலும் பலன் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்

காட்டுமன்னார்கோயில் பகுதியில், குறைந்த தண்ணீரிலும் பலன் தரும் பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெற்றுள்ளனர். காட்டுமன்னார்கோயில் பகுதி, காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியாகும். நிகழாண்டு காவிரியில் தண்ணீர் வராததாலும், பருவமழை பொய்த்ததாலும் நேரடி நெல் விதைப்பு, நடவு செய்த வயல்களில் பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும், சில விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள அழிஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன், "மாப்பிள்ளை சம்பா' என்ற பாரம்பரிய நெல் ரகத்தை நேரடி நெல் விதைப்பு செய்தார். இந்த நெல் ரகத்தைப் பயிரிட தண்ணீர் அதிகளவு தேவையில்லை. மேலும் இது 6 மாதக் காலப் பயிராகும். குறைந்தளவு மழை பெய்தாலும், அந்த ஈரத்தைப் பயன்படுத்தி பயிர் நன்றாக வளர்ந்துவிடும். களைகள் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ரசாயன உரங்கள் பயன்படுத்தவும் தேவையில்லை. இந்தப் பயிர் நன்கு உயரமாக வளரக் கூடியது. இதன் கதிரில் 200 முதல் 300 நெல் மணிகள் வரை இருக்கும் என்பதால், ஏக்கருக்கு 20 மூட்டைகள் வரை மகசூல் பெறலாம்.

பயிர் உயரமாக வளர்வதால் கால்நடைகளுக்கு வைக்கோல் அதிகளவில் கிடைக்கும். இதனால் குறைந்த பரப்பில் பயிர் செய்தாலும், கால்நடைகளுக்கு போதுமான அளவு தீவனம் கிடைத்துவிடும். கால்நடை வளர்ப்போருக்கு இது பயனுள்ள நெல் ரகமாகும். இந்த நெல் ரகத்தின் அரிசி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தக் கூடியது. மேலும் மற்ற நெல் ரகங்களைவிட அதிக விலை போகக் கூடியது. மூட்டை ஒன்றுக்கு (60 கிலோ) ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகிறது. எனவே, விவசாயிகள் குறைந்த தண்ணீரில் நன்கு வளரக்கூடிய இதுபோன்ற நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து லாபம் பெறலாம் என இந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter