பிப்.7இல் மா, மாதுளை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மா மற்றும் மாதுளை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது என அதன் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இப் பயிற்சியில் மா மற்றும் மாதுளை ரகங்கள், மாவில் ஒட்டுக்கட்டும் முறைகளான குருத்து ஒட்டு, நெருக்கு ஒட்டு மற்றும் மொட்டு ஒட்டு கட்டுதல் முறைகளைப் பயன்படுத்தி கன்றுகள் உற்பத்தி செய்தல், பனிப்புகை அறை அமைத்தல், நிழல்வலைக் கூடாரம் அமைத்தல் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.

மேலும் பெரிய மரங்களில் கவாத்து செய்வதற்குரிய பருவம், கவாத்து செய்யும் முறைகள், மாதுளையில் ஒட்டுக்கட்டும் முறைகள், மா மற்றும் மாதுளை பயிர்களுக்கான உர மேலாண்மை, நீர் நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 6 ஆம் தேதிக்குள் பெயர் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Newsletter