சின்னமனூரில் விற்பனையாகாமல் தோட்டத்திலேயே தேங்கிய செங்கரும்புகள்: விவசாயிகள் கவலை

சின்னமனூரில் விற்பனையாகாமல் தோட்டங்களிலேயே செங்கரும்புகள் தேங்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இங்கு விளையும் செங்கரும்புகளை தேனி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்வர். ஆனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்த்த அளவு விற்பனையாக வில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்பகுதியில் கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு மத்திய அரசு கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்ததால் வியாபாரிகள் பணமின்றி அவதியடைந்தனர். இதனால் இப்பகுதியில் செங்கரும்பு விற்பனையும் பெரும் பாதிப்புக்குள்ளானது. பொங்கல் விழாவுக்கு சில நாள்களுக்கு முன் சிறு வியாபாரிகளின் வருகை அதிகளவில் இருந்தது. ஆனால் வழக்கமாக வரும் பெரும் வியாபாரிகளின் வருகை பாதியாக குறைந்ததால் சுமார் 30 சதவீத கரும்பு விற்பனையாகாமல் தோட்டத்திலேயே தேக்கிக் கிடக்கிறது. இதனால் எங்களது பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்றனர்.

Newsletter