சென்னையில் தக்காளி விலை திடீர் உயர்வு

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சில்லறை விற்பனையில் கிலோ ரூ.15-க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.30-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி 24 -ஆம் தேதி வரை, ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனையானது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.180-க்கும், 2-ஆவது ரகம் ரூ.140-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், கோயம்பேட்டில் வெள்ளிக்கிழமை மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கு விற்கப்பட்டது. அதேபோன்று ஒரு பெட்டி (முதல் ரகம்) ரூ.320-ஆக விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ.30-ஆக உயர்ந்தது.

இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சௌந்தரராஜன், தியாகராஜன் ஆகியோர் கூறுகையில், "வழக்கமாக நாள்தோறும் 85 லாரிகளில் 1,300 டன் வரை தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது தக்காளி சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் விளைச்சல் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக 50 முதல் 55 லாரிகளில் 800 டன் தக்காளி மட்டுமே கொண்டு வரப்படுகின்றன. இதனால் அதன் விலை அதிகரித்துள்ளது' என்றனர்.
அதேபோன்று சில்லறை விலையில் கடந்த வாரம் ரூ.10 -க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது ரூ.20 -க்கும், ரூ.25 -க்கு விற்கப்பட்ட அவரை ரூ.35 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

Newsletter