குறிஞ்சிப்பாடியில் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

நெய்வேலி: கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மழை நீர் தேங்கியதால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெய் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

கடலுர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல், வெணிலா, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விவாசயம் செய்யப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்வர் மாதம் பெய்த கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் குறிஞ்சிப்பாடி பகுதியில் விவசாய நிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.

இதில் இருந்தே விவசாயிகள் மீளாத நிலையில் பல இன்னல்களுக்கு இடையே தற்பொழுது மீண்டும் நெல், மணிலா உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கடலூரில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக, நீர்வடிகால் வசதிகள் இல்லாததால், விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது.

இதில் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த  நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. அதே போல சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டிருந்த  60 நாள் பயிரான மணிலாவும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இம்மழை மேலும் 2 நாள் நீடித்தால் மணிலா முழுவதும் அழுகிவிடும் என்று விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Newsletter