ரோஜா மலர் சாகுபடி விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை: ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோஜா மலர் சாகுபடி விவசாயிகள் விற்பனை குறித்து அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்தார். ரோஜா மலர் சாகுபடி, விற்பனை குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியது:

விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்யும் ரோஜா ரகங்களுக்கு காப்புத் தொகை செலுத்த வேண்டுமானால் அந்தக் குறிப்பிட்ட ரகங்கள் "டஸ்' எனப்படும் தனித்தன்மை, சிறப்பு தன்மை, நீடித்த தன்மை ஆகிய குணங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்த ரகங்கள் உள்நாட்டில் சாகுபடி செய்யப்பட்டு மேற்கொண்ட குணங்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இன விருத்தியாளர்களின் விவரங்கள் முறையாகப் பதியப்பட்டிருக்க வேண்டும். விவசாயிகளின் பாதுகாப்பிற்காகதான் பயிர் ரகங்கள் பாதுகாப்புச் சட்டம்- 2001 இயற்றப்பட்டுள்ளது. ஒசூர் மலர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இந்தப் பொருள் தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோஜா மலர் சாகுபடி விவசாயிகள் விற்பனை குறித்து கவலைபட தேவையில்லை என்றார். இந்தக் கூட்டத்தில் கோவை வேளாண்மை பல்கலைக் கழக தோட்டக்கலை பேராசிரியர் மா.கண்ணன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவர் ஜலாலுதீன், மலர் சாகுபடியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter