உருளைக்கிழங்கு கடும் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தப்படியாக  மலைத்தோட்ட காய்கறி சாகுபடியும் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிப்ஃபிளவர், பீன்ஸ், டர்னிப், முள்ளங்கி, மேராக்காய் போன்ற காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. இதில், 500 ஹெக்டேருக்கும் கூடுதலாக உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

உருளைக்கிழங்கு உற்பத்தியில் மட்டும் ரூ. 6 கோடிக்கும் கூடுதலாக விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும், உதகை, மேட்டுப்பாளையம், கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காய்கறிச் சந்தைகளில் உதகை உருளைக்கிழங்குக்கு என தனி மவுசு உள்ளது.  நீலகிரி மாவட்டத்தில்,45 கிலோ கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ. 1,400 முதல் ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.  ஒருசில நேரங்களில் மூட்டை ரூ. 2,500 வரையிலும் விற்பனை ஆனது.  ஆனால், தற்போது உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால் மூட்டைக்கு ரூ. 100 முதல் ரூ.150 வரை மட்டுமே விவசாயிகளுக்குக் கிடைக்கிறது. வியாபாரிகள் சில்லறை விலையில் கிலோ ரூ. 8 முதல் ரூ.12 வரை என விற்பனை செய்கின்றனர்.

நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தங்களது உணவில் உருளைக்கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துவதால், மேற்கண்ட பகுதிகளில்  விற்பனை அதிகரித்த போதிலும், விலை குறைத்தே விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சசிகுமார் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், பஞ்சாப், கர்நாடகம், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகமாகக் காணப்படுகிறது. தமிழகத்தில், திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.  தற்போது அனைத்துப் பகுதிகளிலும் உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரியத் தொடங்கி உள்ளது. வரும் நாள்களில், விலை மேலும் சரியும் என மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

Newsletter