கத்தரிக்காய் விலை உயர்வு; கிழங்குகள் வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வறட்சி நிலவி வருகிறது. தோட்டங்கள் உள்ளவர்களும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். மேலும், பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் சில காய்கனிகள் திரட்சியடையாமல் உதிர்ந்து விழுகின்றன. தை முதல் நாளில் காய்கனிகளின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் பலரும் காய்கனி அறுவடையை இரு வாரங்களுக்கு தள்ளிவைக்க நினைப்பதால் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

அதனால் கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.20-க்கு விற்பனையான கத்தரிக்காய் இப்போது இரட்டிப்பாகி உள்ளது. இதேபோல பாகற்காய் உள்ளிட்டவையும் விலை உயர்ந்துள்ளன. கிழங்குகள் வரத்து சந்தைகளுக்கு அதிகரித்துள்ளது.

திருநெல்வேலியில் உள்ள சந்தையில் காய்கனிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோவுக்கு):  கத்தரி-ரூ.44, வெண்டைக்காய்-16, தக்காளி-14, அவரைக்காய்-28, புடலங்காய்-12, பாகற்காய்-28, பீர்க்கங்காய்-16, சுரைக்காய்-8, தடியங்காய்-12, பூசணிக்காய்-12, மாங்காய்-30, மிளகாய்-30, முள்ளங்கி-14, கொத்தவரை-32, சேனைக்கிழங்கு-26, கருணைக்கிழங்கு-28, இஞ்சி-40, உருளைக்கிழங்கு-22, கேரட்-18, பீட்ரூட்-12, முட்டைகோஸ்-10, சவ்சவ்-12, ரிங்பீன்ஸ்-16, காலிபிளவர்-30, பூண்டு-60, சின்னவெங்காயம்-.25, பல்லாரி-12, கொய்யாப்பழம்-40, பப்பாளி-ரூ.30.

Newsletter