தொடர்ந்து பனிப் பொழிவு: கொடைக்கானல் பூங்காவிலுள்ள மலர்ச் செடிகளுக்கு நிழல் வலை

கொடைக்கானலில் தொடர்ந்து நிலவி வரும் பனிப் பொழிவால்,  பூங்காக்களில் உள்ள செடி நாற்றுகளை பாதுகாக்க நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பொதுவாக டிசம்பர் மாதம் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும். வழக்கமாக 12 டிகிரி செல்சியஸிலிருந்து 16-டிகிரி செல்சியஸ் வரை குளிர் நிலவும்.

ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக 8 டிகிரி செல்சியஸ் உள்ளதால், உறை பனி நிலவுகிறது. பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்காக்களில் உள்ள புற்கள் பனிப்பொழிவால் கருகி வருகின்றன.

இந் நிலையில், சீசனுக்காக மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள 25-க்கும் மேற்பட்ட மலர் நாற்றுகளில் தற்போது செடிகள் வளர ஆரம்பித்துள்ளன. இவற்றை பனி தாக்காமல் காக்க, மாலை நேரங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பனிப் பொழிவால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் பெருமளவு தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி: கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக புத்தாண்டை கொண்டாடும் விதமாக, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவர்கள், பனிப் பொழிவையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.    

எனவே, ஏரிச்சாலை, செவன் ரோடு, லாஸ்காட் சாலை, அப்சர்வேட்டரி, பில்லர்ராக் சாலை ஆகியப் பகுதிகளில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும், கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.

Newsletter