நீரின்றிக் கருகும் தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு: விவசாயிகள் கோரிக்கை

நீரின்றிக் கருகும் தென்னை மரங்களுக்கு நஷ்ட ஈடு: விவசாயிகள் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் தென்னை மரங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருவாய் அலுவலர் கிறிஸ்துராஜ், வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகரன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயி சு.பழனிசாமி பேசும்போது, கோவை மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் தானிய வகை பயிர்கள் கருகியுள்ளன. இதனால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

இடிகரை துரைசாமி பேசும்போது, ஆந்திர மாநிலத்தில் இருந்து கோவைக்கு விற்பனைக்கு வரும் மாட்டுத் தீவனத்தில் இரும்புத் துண்டுகள் இருந்ததால் 2 மாடுகள் உயிரிழந்துள்ளன. எனவே, தீவனத்தை விற்பனைக்கு அனுப்பும் முன்னதாக அதை நன்கு பரிசோதனை செய்த பிறகு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றார். திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசும்போது, மாவட்டத்தின் 85 சதவீத விவசாயிகளுக்கு தென்னை முக்கிய பயிராக உள்ள நிலையில், தற்போது தென்னை, பனை மரங்கள் காயும் அளவுக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே எஞ்சியுள்ள தென்னை மரங்கள் ஈரியோபைட், வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் மருந்து தெளித்தால் மட்டுமே இந்த மரங்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

வழுக்குப்பாறை பாலு பேசும்போது, மாவட்டம் முழுவதிலும் உள்ள குளம், குட்டைகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். மதுக்கரை செட்டிப்பாளையம் பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல் உடைக்கும் கிரஷரை அகற்ற வேண்டும் என்றார்.

பேரூர் கந்தசாமி பேசும்போது, தெரு நாய்களை கட்டுப்படுத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும். உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உரம், கேரளத்துக்கு கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும். வனத் துறையில் காலியாக உள்ள வனச் சரகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.

செல்லப்பம்பாளையம் நல்லப்பன் பேசும்போது, வறட்சியால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கொச்சி தென்னை வாரியத்தின் விதிகளின்படி, ஒரு விவசாயி 32 தென்னை மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு பெற முடிகிறது. அதேபோல், மாநில அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் 175 மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு பெற முடிகிறது. அதுவும் நோய் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்று உள்ளது.

இந்த விதிகளை மாற்றி, பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களுக்குமே நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோர் பேசும்போது, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் பொதுவான பிரச்னைகள் குறித்து மட்டுமே பேச வேண்டும். குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கும்படி கேட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்படும்.

உப்பிலிபாளையம் பகுதியில் தனியார் குடியிருப்பு நிர்வாகம் அமைத்துள்ள சுவரை அகற்றவும், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பை பூட்டி "சீல்' வைக்கவும் உள்ளூர் திட்டக் குழுமம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Newsletter