தேனி மாவட்டத்தில் வறட்சியால் 32 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் வறட்சியால், 32 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியம், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருந்ததால், இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவில் உள்ள இருபோக நெல்  வயல்களில், முதல்போக சாகுபடிக்கு வழக்கத்தை விட காலதாமதமாக கடந்த ஜூலை 24-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் முதல் போக நெல் சாகுபடியில் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பருவமழை பொய்த்தது காரணமாக, பெரியாறு அணையில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 2-ஆம் போக நெல் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஓரிரு நாள்கள் பெய்த மழையை நம்பி, 32 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கம்பு, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மொச்சை, தட்டைப்பயறு உள்ளிட்டவற்றின் சாகுபடியை தொடங்கினர். ஆனால், மழையின்றி 12 ஆயிரம் ஏக்கரில் சிறுதானியப் பயிர்களும், 10 ஆயிரம் ஏக்கரில் எண்ணெய் வித்துப் பயிர்களும் கருகி வருகின்றன.  தற்போது, அறுவடை செய்யவேண்டிய பருவத்தில் உள்ள பயிர்களில் முழுமையாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று, விவசாயிகள் கூறினர்.

வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பு:    இந்நிலையில், விவசாயத் துறை சார்பில் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. புள்ளியியல் துறை அலுவலர்கள், உதவி விவசாய அலுவலர்கள் மற்றும் பயிர்க் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கிராமம் வாரியாக விவசாய நிலங்களில் வறட்சி மற்றும் மகசூல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளின் நிலங்கள் மட்டுமின்றி, அனைத்து சாகுபடி நிலங்களிலும் மகசூல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை சேராதவர்கள், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள விவசாயத் துறை அலுவலர்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வங்கிகளில் தொடர்பு கொண்டு வரும் 2017, ஜனவரி 15-ஆம் தேதிக்குள் சேரலாம் என்று விவசாயத் துறை அலுவலர்கள் கூறினர்.

நெல் விவசாயிகளுக்கு சிக்கல்:    வறட்சியால் பயிர் சாகுபடியின்றி தரிசாக விடப்பட்டுள்ள நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் 8,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள வயல்களில் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்டு நிலங்களை தரிசாக வைத்துள்ளனர்.

ஆனால், குறிப்பிட்ட கிராமத்தில் 70 சதவிகிதம் பரப்பளவில் உள்ள நிலங்கள் தரிசாக விடப்பட்டிருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று காப்பீட்டுத் திட்ட விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், காப்பீட்டுத் தொகை பெறுவதிலும் தங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சிறு மற்றும் குறு நெல் சாகுபடி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Newsletter