பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திட விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை இடர்ப்பாடுகளில் இருந்து பயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக, பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வெம்பாக்கம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் த.பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்தில் 250 மி.மீ. அளவில் பெய்துள்ளதாலும், ஏரி, கிணறுகளில் போதுமான அளவு நீர் உள்ளதாலும், ராபி பருவத்தில் விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட நெல் விதைகளான கோ.51, ஏடீடி 45, குறுகிய கால உளுந்து விதைகள் வம்பன் 5, மணிலா விதைகள் டிஎம்வி 13, விஆர் 12 ஆகியவற்றை பயிரிட்டு, இரு மடங்கு உற்பத்தி பெறலாம். விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் வெம்பாக்கம், பிரம்மதேசம், மாமண்டூர் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தங்களது நெல், மணிலா, உளுந்து பயிர்களை, இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்க பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பிரீமியம் செலுத்தி, பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடையலாம்.

பயிர்க் காப்பீட்டுக் கட்டண விவரம்: நவரை நெல்லுக்கு காப்பீட்டுக் கட்டணம் ஒரு ஏக்கருக்கு ரூ.330, நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.300, உளுந்து பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.180 ஆகும்.

Newsletter