நத்தம் பகுதியில் கொய்யா பழ சீசன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் வத்திப்பட்டி, லிங்கவாடி, பரளி, தேத்தாம்பட்டி, மலையூர், உலுப்பகுடி, புன்னப்பட்டி, புதுப்பட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, மூங்கில்பட்டி உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ஆங்காங்கே இறவை தண்ணீர் மூலமும், ஆழ்குழாய் தண்ணீர் வாயிலாகவும், சொட்டு நீர் பயன்பாட்டிலும் இந்த கடும் வறட்சியிலும் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் ஆண்டிற்கு 2 முறை தை, மற்றும் ஆடி மாதங்களிலும் கொய்யா பழ சீசன் வரும். ஒரு பிளாஸ்டிக் ட்ரையில் 18 கிலோ எடை கொண்டது ரூபாய் ஆயிரம் முதல் 1100 வரை விலை போகிறது. மேலும் மொத்த கடைகளில் வாங்கி சில்லரையாக ஒரு கிலோ ரூ.60 முதல் 70 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கொய்யா பழத்தின் பயன்பாடுகளும் மருத்துவ குணம் பற்றியும் ஒரு விவசாயி கூறியதாவது:

பழங்களிலே விலை குறைவாகவும் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமானது கொய்யா பழமாகும். இதில் உயிர் சத்தும் தாது உப்புக்களும் நிறைந்த்துள்ளதாக தெரிகிறது. மேலும் வைட்டமின் பி, சி, ஆகிய உயிர் சத்துகளும் இந்த பழத்தில் அடங்கியுள்ளது. தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும் இதில் காணப்படுகிறது. கொய்யா மரத்தின் இலைகளை தேவையான அளவு அரைத்து காயம் பட்ட இடத்தில் தடவினால் அவை சன்னம் சன்னமாக குறையும். கொய்யா கொழுந்துகளை அல்சர் மற்றும் பல்வலிகளுக்கு பயன்படுத்துகின்றனர். மதுபோதைக்கு அடிமையான மதுப்பிரியர்கள் இதிலிருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை மறந்து போய் விடும். உணவு அருந்துவதற்கு முன்பு இப்பழத்தை சாப்பிடகூடாது. சாப்பிட்ட பிறகோ, சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ இதை சாப்பிடவேண்டும்.  தவிர இந்த பழத்தை இரவு நேரங்களில் தூங்கும் முன்பாக சாப்பிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter