நெற்பயிரில் தொற்று நோய்: வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆய்வு

திருவள்ளூர்: வர்தா புயல் காரணமாக நெற்பயிரில் இலை உறை அழுகல் நோய், நிறம் மாறும் நோய் உள்ளிட்ட தொற்றுநோய் கண்டுள்ள பகுதிகளை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். திருவள்ளூரை அடுத்த திரூரில் வேளாண்மை அறிவியல் நிலையம், நெல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து வகையான பயிர்களையும் விளைவித்து, ஆய்வு செய்து, அதற்கு தேவையான ஊட்டச்சத்துகள், நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.  

இந்நிலையில் வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாட்டம் புல்லரம்பாக்கம், தலக்காஞ்சேரி, புதூர் ஆகிய பகுதிகளில் வேளாண் நிலைய அதிகாரிகள் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவன பிரதிநிதிகள் நேரில் சென்று நெற்பயிரை ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தலைவரும் விஞ்ஞானியுமான ரா.அகிலா, உழவியல் பேராசிரியர் சி. முரளிதரன், விதை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப பேராசிரியர் ஜெகதாம்பாள், பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் எ. சுமதி, மரபணு பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பிபிடி-5204 ரக நெற்பயிரில் இலை உறை அழுகல் நோய் மற்றும் நெல் நிறம் மாறும் நோய் தாக்கி அதிக சேதம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, இலை உறை அழுகல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டசிம் 50 சதவீதம்- 500 கிராம், எக்டர் அல்லது ஹெக்சகோனாசோல் 75 சதவீதம் 100 மில்லி கிராம் லிட்டர் தண்ணீருக்கு இடவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

நெல் நிறம் மாறும் நோயைக் கட்டுப்படுத்த கதிர் பூக்கும் பருவத்தில் கார்பன்டசிம், திரம், மேங்கோசெப் ஆகியவற்றை தெளிக்க வேண்டும். மேலும் பூக்கும் பருவத்திலும் 15 நாள்கள் கழித்தும் டிரபி 2 சதக்கரைசல் இலைவழி ஊட்டமாகத் தெளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

Newsletter