விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் விநியோகம்

பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் விநியோகிக்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குநர் சு.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விசைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான், ரோட்டவேட்டர் கலப்பை, நேரடி நெல் விதைப்பு செய்யும் கலப்பை (நங்ங்க் ஈழ்ண்ப்ப்), தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், நீர் கடத்தும் குழாய்கள் ஆகியவை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில், பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. வேளாண் துறை அங்கீகரித்துள்ள விற்பனையாளரிடம் கருவிகளை விவசாயிகள் முழுவிலை கொடுத்து கொள்முதல் செய்துகொண்டு, பட்டியல், ஆதார் நகல், வங்கி புத்தக நகல், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் ஆகியவற்றை அளித்தால், மானியத் தொகை கருவூலம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
 
தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், நீர் கடத்தும் குழாய்கள் ஆகியவற்றை மானியத்தில் பெறுவதற்கு விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆழ்குழாய் கிணறு, வயலின் வரைபடம், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், வங்கி வரைவோலை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். எனவே, மானியம் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter