மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: அடுத்த ஆண்டு 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் கதி என்ன?

மேட்டூர் அணையில் நிகழாண்டு நீர்மட்டம் கணிசமாக குறைந்து விட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதி சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் காவிரி டெல்டா பாசன வசதி பெறும் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் கதி என்னவாகும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழகத்தில் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும். குறுவை, சம்பா, தாளடிப் பயிர்களின் பாசனத்துக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும். கடந்த ஆண்டு ஜூன் 12-இல் மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

செப்டம்பர் 20-ஆம் தேதி சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அணை இருப்பு குறைந்தது: நீர்வரத்து சரிந்த நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்தது. நவம்பர் 11-இல் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 750 கன அடியாகக் குறைக்கப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 38 அடியாகச் சரிந்துள்ளது. இருப்பு 11 டி.எம்.சி மட்டுமே. குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் பருவமழையும் கைகொடுக்கவில்லை.

இதேநிலை தொடர்ந்தால், அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்துவிடும். ஜூன் 12-இல் தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்க வேண்டும். அது சாத்தியமாகும் நிலை இப்போது இல்லை. எனவே, ஜூன் 12-இல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கண்டுகொள்ளாத மத்திய அரசு: நிகழ் ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து 47 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் கட்சிகள் எதுவாக இருந்தாலும், காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு எதிராகவே உள்ளன.

இதனால் காவிரி நீரைப் பெறுவதற்கு தமிழகம் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயம் உள்ளது. காவிரி நீர் கானல் நீரானால் தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். தமிழகத்தின் நெற்களஞ்சியம் வறட்சிக்கு இலக்காகி விடும்.

Newsletter