பிரதமர் பயிர்க் காப்பீடுத் திட்டம் அமல்: டிசம்பர் 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, விவசாயிகள் வருகிற டிசம்பர் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நடப்பு சம்பா பருவம் முதலும், ஏனாம் பகுதியில் காரிப் ஃராபி பருவம் முதலும், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டம் புதுச்சேரியில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நெல், கரும்பு, பயறு வகைகள், பருத்தி ஆகிய பயிர்களுக்கும், ஏனாம் பகுதியில் நெல் பயிருக்கும் யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் முலம் பயிர்க் காப்பீடு செய்யப்படும். மேலும், காரைக்கால் பகுதியில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நெல், பயறு வகைகள், பருத்தி ஆகிய பயிர்களுக்கும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் நிறுவனம் மூலம் பயிர்க் காப்பீடு செய்யப்படும். வங்கிகளில் விவசாயக் கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகளில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு, இத்திட்டத்தில் சேர்ந்திட பதிவு செய்யப்படும்.

விவசாயக் கடன் பெறாத இதர விவசாயிகள் அனைவருக்கும் வேளாண் துறையின் உழவர் உதவியகங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு பதிவு செய்யப்படும். பிரீமியத்தை அரசே செலுத்தும். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை முழுவதையும் புதுச்சேரி அரசே செலுத்தும். இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி பகுதியில் நிகழ் சம்பா நெல்பயிருக்கு ஹெக்டருக்கு ரூ.44,000 காப்பீட்டுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான பிரீமியம் தொகை ரூ.3850-ல் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகையான ரூ.660-யும் மாநிலத்தின் மானியத் தொகையான ரூ.1595-ம் புதுச்சேரி அரசே ஏற்றுக்கொள்ளும். மீதம் உள்ள ரூ.1595-ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும். இதனால் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்யப்பட்டு அவர்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும்.

23-க்குள் பதிவு செய்ய வேண்டும்:

எனவே, இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றிட விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள உழவர் உதவியகங்கள் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று 23.12.2016 க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Newsletter