ஈரோடு மஞ்சள் சந்தையில் மின்னணு ஏல முறை அறிமுகமாகுமா?

ஏறிஇறங்கும் மஞ்சள் விலையால் தடுமாறி வரும் மஞ்சள் விவசாயிகளுக்கு கைகொடுக்க மின்னணு ஏல முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம், சாங்கிலி, தமிழகத்தில் ஈரோடு என இந்தியாவில் மூன்று இடங்களில்தான் தேசிய அளவில் தரமான மஞ்சள் சந்தை உள்ளது. ஈரோடு - நசியனூர் சாலையில் உள்ள செம்மாம்பாளையம் தனியார் மஞ்சள் சந்தையிலும், பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்திலும், ஈரோடு மணிக்கூண்டு அருகே கோபி கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்திலும், கருங்கல்பாளையத்தில் ஈரோடு கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்திலும் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.

ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈரோடு மஞ்சள் சந்தைக்கு வந்து தங்களது மஞ்சளை ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் இக்கூடத்தில் வைக்கப்படும் மஞ்சள் மாதிரிகளைப் பார்த்து அவற்றின் தரத்துக்கேற்ப விலை நிர்ணயம் செய்கின்றனர்.

2011-ஆம் ஆண்டில் ஒரு பவுன் தங்கமும், ஒரு குவிண்டால் மஞ்சளும் ஏறத்தாழ ஒரே விலையாக (ரூ. 17,000) இருந்தது. ஆனால், அதற்குப் பின்னர் மஞ்சள் விலை படிப்படியாக குறைந்து 2013-ல் ரூ. 3,200-ஆக வீழ்ச்சி அடைந்தது. பின்னர், மீண்டும் விலை உயர்ந்து 2012-ல் குவிண்டால் மஞ்சள் ரூ. 10 ஆயிரத்தைத் தொட்டது.

இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் மஞ்சள் விலை சரிந்தது. தொடர்ந்து ரூ. 7,000 முதல் ரூ. 8,000 வரை மட்டும் தான் கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்தது. இந்நிலையில், 2015 நவம்பரில் மீண்டும் ரூ. 10 ஆயிரத்தை மஞ்சள் விலை தொட்டது. கடந்த 6 மாதங்களாக ரூ. 7,000 முதல் ரூ. 9,000 வரை உள்ளது.

நிலையின்றி ஏறிஇறங்கி வரும் மஞ்சள் விலைக்குச் செயற்கையாக உருவாக்கப்படும் தட்டுப்பாடுதான் காரணம் என்பது மஞ்சள் விவசாயிகளின் குற்றச்சாட்டு. செயற்கை தட்டுப்பாட்டைப் போக்கி மஞ்சள் விலை சீராக இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதுகுறித்து, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியதாவது: உலக மஞ்சள் உற்பத்தியில் 92 சதவீதம் இந்தியாவில்தான் விளைகிறது. இந்தியாவில் சாகுபடியாகும் மொத்த பரப்பில் 41 சதவீதம் ஆந்திரத்திலும், 21 சதவீதம் தமிழகத்திலும், 7 சதவீதம் கர்நாடகம், மகாராஷ்டிரத்திலும் உள்ளது. நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கர் மஞ்சள் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. அதில், 50 சதவீதத்துக்குமேல் ஈரோடு மாவட்டத்தில்தான் பயிரிடப்படுகிறது.

தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் 50 சதவீதத்துக்கும் மேலும், மகாராஷ்டிரத்தில் வறட்சியால் 60 சதவீதத்துக்கு மேலும் சாகுபடி குறைந்துவிட்டது. விலை வீழ்ச்சி காரணமாக தமிழகத்தில் ஈரோடு தவிர கள்ளக்குறிச்சி, நாமகிரிபேட்டை, தருமபுரி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் பயிரிடுவதைக் குறைத்துவிட்டனர். பொருளாதாரக் கொள்கையின்படி பார்த்தால் எந்தப் பொருளும் உற்பத்தி அதிகரிக்கும் போது விலைச் சரிவு ஏற்படும். உற்பத்தி குறையும்போது விலை ஏற்றம் இருக்கும். ஆனால், மஞ்சள் வர்த்தகத்தில் மிகப் பெரிய முதலாளிகளின் தலையீட்டில் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. மஞ்சள் விலை ஏற்ற இறக்கத்தை பண பலமிக்க சிலர் செய்கின்றனர். மத்திய அரசின் வேளாண் துறையின்கீழ் சந்தை தலையீடு கொள்கை உள்ளது. இதில், ரூ. 75,000 கோடி நிதி உள்ளது. எந்தப் பொருள் உற்பத்திச் செலவைவிட விலை குறைகிறதோ அப்போது மாநில அரசின் உதவியோடு அந்தப் பொருளை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்க வேண்டும்.

வாங்கி அதை இருப்பு வைக்க வேண்டும். இதற்கான முழு முதலீடும் மத்திய அரசுடையது. அதை வாங்குவது மாநில அரசின் பொறுப்பு. விளைபொருளின் விலை உச்சத்துக்குப்போய், நுகர்வோர் வாங்கும் சக்தியை இழக்கும்போது இருப்பு வைத்த பொருளை குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்வது வழக்கம். ஆனால், மஞ்சள் வர்த்தகத்தைப் பொருத்தவரை மத்திய அரசும், மாநில அரசும் இதைச் செய்வதில்லை. மஞ்சள் விலை உற்பத்திச் செலவு ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ. 9,000 என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட தொகை ஆகும். அந்த விலைக்கு வரும் போது அரசு கொள்முதல் செய்தால் விலை உயர்வு ஏற்படும். விலை குறைந்தாலும், விலை ஏறினாலும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. அதனால் தான் நல்ல விலை கிடைப்பதில்லை.

இந்தியாவிலேயே பெரிய சந்தையான ஈரோட்டில்தான் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஈரோட்டில் மஞ்சளை வாங்கும் வியாபாரிகளே, விற்றுக்கொடுக்கும் முகவர்களாக இருக்கின்றனர். ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டில் இயங்குவதாக அரசு கூறினாலும், அவர்கள் தான் தினமும் ஏலத்தை காலை 10 மணிக்குத் தொடங்குகின்றனர். தனியார் சந்தையில் முதலில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் பாதிப்பு ஈரோட்டில் பிற மூன்று இடங்களில் நடைபெறும் ஏலத்தையும் பாதிக்கிறது. இதற்கு பதில் ஒரே இடத்தில் விவசாயிகள், அரசு சார்பில் ஒருங்கிணைந்த ஏலம் நடத்தினால் கூடுதல் விலை கிடைக்கும். எல்லா வியாபாரிகளும் ஒரே இடத்தில் குவியும்போது போட்டி மனப்பான்மையில் வாங்குவார்கள். மின்னியல் மேடை மாதிரிகள் தரம் பிரிக்கப்பட்டு விவசாயிகள் விற்க விரும்பும் விலையில் உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் காணொலி மூலமாக மின்னணு ஏலம் வைத்தால் உலகில் எந்த மூலையில் இருக்கும் வியாபாரிகளும் நேரடியாக வாங்குவார்கள் என்றார்.

Newsletter