வேதாரண்யம் பகுதியில் குறைந்துவரும் செங்காந்த மலர் சாகுபடி

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் வேதாரண்யம் பகுதியில் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கார்த்திகை கிழங்கு என்னும் செங்காந்த மலர் விதை உற்பத்தி சாகுபடி குறைந்து போனது.

மழைக்காலத்தில் காடுகளில் இயற்கையாகவே முளைத்து, கார்த்திகை மாதத்தில் பூ பூத்து காய்க்கும் தன்மையுடையது என்பதால், இந்த வகை செடியை கார்த்திகை கிழங்கு செடி என அழைப்பது வழக்கம். கலப்பைக் கிழங்கு, கண்வலிக் கிழங்கு என வேறு பெயர்களிலும் அழைக்கப்படும்.

இதன் கிழங்கு நச்சுத் தன்மையுடையது. இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் விதைகள் மருத்துவ குணமுடையவை. பேன் மருந்து போன்ற பல்வேறு பயன்பாடுகளின் தேவைக்கு வெளிநாடுகளில் சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருந்து வந்ததால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் ஆர்வத்தோடு பயிர் செய்து வந்தனர். தொடக்கக் காலத்தில் இந்த விதைகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் அன்னியச் செலாவணி மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வந்தது.

காலப்போக்கில் இடைத்தரகர்கள் பிரச்னை போன்ற காரணங்களால், விவசாயிகளிடையே சாகுபடியில் இருந்து வந்த ஆர்வம் மெல்ல குறைந்து வந்தது. வேதாரண்யம் பகுதியில் புகையிலைக்கு மாற்றாகவும், சவுக்கு, முந்திரி சாகுபடி செய்யப்படும் வயல்களிலும் மாற்றுப் பயிராக செங்காந்த மலர் செடியை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 500 ஏக்கர் வரையில் சாகுபடி செய்யப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் இந்த சாகுபடிக்குத் தேவையான மானியம் போன்ற சலுகைகளும் அளிக்கப்பட்டன. பலத்த மழை நேரத்தில் பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்படும் இந்தச் செடிகள், கார்த்திகை மாதத்தில் பூத்துக்குலுங்குவது பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நச்சுத்தன்மை, சந்தை வாய்ப்புகள் முடக்கம் போன்ற காரணங்களால் இதன் சாகுபடி பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது.

பொய்த்த பருவமழை:

இந்நிலையில், நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் சாகுபடி  பருவத்தில் போதிய ஈரப்பதம் இல்லாமல் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இதனால், நடப்புப் பருவத்துக்கான செங்காந்த மலர் செடி சாகுபடியைத் தொடங்க  முடியாமல் போனதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழாண்டு கார்த்திகை மாதம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், காடுகள், சாலையோரங்களில் மட்டுமே செங்காந்த மலர்களைக் காண முடிகிறது.

Newsletter